நடுரோட்டில் நின்ற போலீஸ் வாகனத்துக்கு பூட்டு


நடுரோட்டில் நின்ற போலீஸ் வாகனத்துக்கு பூட்டு
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டம் அனைவருக்கும் சமம் என்று நடுரோட்டில் நின்ற போலீஸ் வாகனத்துக்கு பூட்டு போட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.

பெங்களூரு:-

பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு டோயிங் உள்ளிட்ட நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுத்து வந்தனர். இதற்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் டயர்கள் ராட்சத பூட்டை கொண்டு பூட்டப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனத்திற்கு ராட்சத பூட்டு போடப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அதில் நடுரோட்டில் போலீஸ் துறைக்கு சொந்தமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த கார் விதிமீறி அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த காரின் டயருக்கு, போக்குவரத்து போலீசார் ராட்சத பூட்டு போட்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்வையிட்ட இணையதள வாசிகள் பலரும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் விதிமீறி சாலையில் நிறுத்திய போலீஸ் வாகனத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளதாகவும், கடமை தவறாத போலீசாருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். விதிமீறி சாலையில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி அதன் டிரைவரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story