மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக சட்ட போராட்டம்: பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்ட பகுதி தொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அரசாணை பிறப்பிப்பு
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் நோக்கத்தில் அதை ஒட்டியுள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும். அங்கு எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மக்களுக்கு கர்நாடக அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் போலீஸ் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்றுநடைபெற்றது. இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்ட போராட்டம்
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பகுதி தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் கருத்துகளை கேட்கவும் தீர்மானித்துள்ளோம். மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
தலைமையில் ஒரு குழு டெல்லிக்கு சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம். கர்நாடக அரசு தெரிவித்த ஆட்சேபனைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
மக்களின் வாழ்க்கை
சரியான மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வு நடைபெறவில்லை. ஒருவேளை மத்திய அரசின் அரசாணை அமலுக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். அதனால் எக்காரணம் கொண்டும் அந்த அரசாணை அமலுக்கு வருவதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங், தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார், சபாநாயகர் காகேரி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.