கொள்ளேகால்: கொதிக்கும் வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை சாவு


கொள்ளேகால்: கொதிக்கும் வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகாலில் கொதிக்கும் வெந்நீர் கொட்டியதில் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கொள்ளேகால்-

கொள்ளேகாலில் கொதிக்கும் வெந்நீர் கொட்டியதில் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

4 வயது குழந்தை

சாம்ராஜ்நகா் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சத்தேகாலா கிராமத்தை சேர்ந்தவர் கிரண். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 வயதில் திருவந்த் நாயக் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரண் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவியும், மகன் திருவந்த் நாயக்கும் மட்டும் இருந்தனர்.

இந்த நிலையில் மதியம் குழந்தை திருவந்த் நாயக்கை குளிக்க வைக்க, கிரணின் மனைவி வெந்நீர் வைத்தார். பின்னர் கொதிக்கும் வெந்நீரை ஒரு வாளியில் நிரப்பி தொட்டி அருகே வைத்துவிட்டு டவல் எடுத்துவர அவர் வீட்டுக்குள் சென்றார்.

வெந்நீர் கொட்டியது

அப்போது குழந்தை திருவந்த் நாயக், தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வாளியில் இருந்த கொதிக்கும் வெந்நீரில் திருவந்த் நாயக் கைவிட முயன்றான். அப்போது எதிர்பாராதவிதமாக வாளி சாய்ந்து, கொதிக்கும் வெந்நீர் திருவந்த் நாயக் உடல் மீது கொட்டியது. இதனால் வெந்நீர் சூடு தாங்காமல் குழந்தை கதறி அழுதது. மேலும் வெந்நீர் கொட்டியதில் குழந்தையின் உடல் முழுவதும் வெந்துபோனது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்து அவனது தாய ஓடி வந்து பார்த்தார். அப்போது உடல் வெந்துபோன நிலையில் குழந்தை திருவந்த் நாயக் கதறி அழுவதை பார்த்து அவர் மேலும் அதிர்ந்து போனார். பின்னர் குழந்தைைய தூக்கி கொண்டு கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தை திருவந்த் நாயக் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை திருவந்த் நாயக் பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து அவனது தாய் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story