கர்நாடகத்தை மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை; பா.ஜனதா குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் ேமலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வசூல் அதிகரிக்கும், கமிஷன் அதிகரிக்கும், ஊழல் அதிகரிக்கும், கர்நாடகம் அக்கட்சி மேலிடத்திற்கு ஏ.டி.எம். ஆக மாறும், அராஜகம் அதிகரிக்கும், பயங்கரவாதிகளின் புகழிடமாக மாறும் என்ற பேச்சை தற்போது உள்ள காங்கிரஸ் அரசு உண்மையாக்கியுள்ளது. அறிவியலுக்கான உத்தரவாத திட்டங்கள், போலி பரிசு கூப்பன்கள், ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறியே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியது தான் முதல் சாதனை.
தனக்கு தேவையான காண்டிராக்டர்கள் மூலம் கமிஷன் வசூலிக்கும் காங்கிரஸ், முந்தைய பா.ஜனதா ஆட்சியில் அவர்களை ஆட்சிக்கு எதிராக பேசும்படி தூண்டிவிட்டது. ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வசூலிப்பதாக உறுதியளித்து டி.கே.சிவக்குமார் பதவியில் அமர்ந்துள்ளார். முதல் கட்டமாக ரூ.1,000 கோடி அனுப்ப முயற்சி செய்தபோது, வருமான வரித்துறையில் சிக்கியுள்ளனர். இதன் மூலம் காங்கிரசின் திருட்டு ஆட்டம் பகிரங்கமாகியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகம் திவாலாகிவிடும். காங்கிரசார் மட்டும் திவான்களாக ஆவார்கள்.
இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பா.ஜனதாவில் முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி, மந்திரி பதவிக்கு ரூ.80 கோடி, எம்.எல்.ஏ. டிக்கெட்டுக்கு ரூ.7 கோடி என நிர்ணயம் செய்து இருந்தது. இதன் மூலம் பா.ஜனதா மேலிடம் கர்நாடகத்தை ரிசர்வ் வங்கியாக மாற்றிக் கொண்டது. தேர்தலின்போது 3 நாட்களுக்கு ஒரு முறை பிரதமர் மோடி வசூலுக்காக வந்தார்" என்றார்.