அமர்நாத் குகை கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதால் ஆதங்கப்பட வேண்டாம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


அமர்நாத் குகை கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதால் ஆதங்கப்பட வேண்டாம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

அமர்நாத் குகை கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதால் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

100 கன்னடர்கள் சிக்கினர்

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். அதுபோல், கன்னர்களும் இந்த ஆண்டு புனித யாத்திரைக்காக அமர்நாத் குகை கோவிலுக்கு சென்றிருந்தனர். நேற்று இரவு(அதாவது நேற்று முன்தினம்) மேகவெடிப்பு காரணமாக உண்டான பலத்தமழையால், அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் கர்நாடகத்தில் இருந்து புனித யாத்திரை மேற்கொண்ட 100 கன்னடர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது பற்றி அறிந்ததும் கன்னடர்கள், அவர்களது உறவினர்களை தொடர்பு கொள்ள வசதியாக உதவி மையத்தை அரசு திறந்துள்ளது. 15 முதல் 20 அழைப்புகள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவலின் பேரில் அமர்நாத்தில் 100 கன்னடர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பாக இருப்பதால்...

கன்னடர்கள் அனைவரையும் பாதுகாப்பாக கர்நாடகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அமர்நாத்தில் சிக்கி இருக்கும் கன்னடர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து அமர்நாத் புனித யாத்திரைக்கு கன்னடர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதால், யாரும் ஆதங்கப்பட வேண்டாம்.

அமர்நாத்தில் சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்டு கர்நாடகத்திற்கு கொண்டு வருவது அரசின் கடமை ஆகும். அரசு அதிகாரிகள், அங்குள்ள கன்னடர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள அதிகாரிகளையும், நமது மாநில அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். மத்திய அரசு, என்.டி.ஆர்.எப். மற்றும் எஸ்.டி.ஆர்.எப். படைகளின் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு கன்னடர்களை பாதுகாப்பாக மீட்டு, கர்நாடகத்திற்கு அழைத்து வரும் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 2 நாட்கள் மழை

மாநிலத்தில் இன்னும் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மாவட்ட கலெக்டர்கள், பிற அரசு அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும், நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளேன். மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது அரசின் முதல் நோக்கமாகும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட கலெக்டர்களே நிவாரண உதவிகளை வழங்குவாா்கள்.

ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமர்நாத் புனித யாத்திரைக்கு மைசூருவில் இருந்து வக்கீல்கள் குழுவாக சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வெள்ள பெருக்கு ஏற்பட்ட பகுதியில் இருந்து வக்கீல்கள் குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story