ஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் நீக்கமா?
பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்கியதாக தேவேகவுடா பெயரில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
பெங்களூரு:
பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்கியதாக தேவேகவுடா பெயரில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
பா.ஜனதாவுடன் கூட்டணி
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனியாக நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி, எக்காரணம் கொண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சி.எம்.இப்ராகிமின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அமைதி காத்து வருகிறார்.
குமாரசாமி-நிகில் நீக்கமா?
இந்த நிலையில் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி ஆகியோரை ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் நீக்கியதாக அவரது பெயரில் நேற்று ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சி.எம்.இப்ராகிமுக்கு எதிராக பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே குமாரசாமி, நிகில் குமாரசாமியை நீக்கியதாக வெளியான கடிதத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சி.எம்.இப்ராகிம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரு ஜே.சி.நகர் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
போலி கடிதங்கள்
அந்த புகாரில் சி.எம்.இப்ராகிம், "எனது பெயரில் போலி கடிதத்தை சில விஷமிகள் வெளியிட்டு உள்ளனர். இதனால் எனக்கும், கட்சிக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த கடிதத்தால் எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த போலி கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் பதவியில் இருந்து சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டு உள்ளதாக அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பெயரில் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனதா தளம் (எஸ்) கட்சி தொண்டர்களே இந்த போலி கடிதத்தை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போலி கடிதங்கள் அக்கட்சி மட்டுமின்றி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 கடிதங்களும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சி.எம்.இப்ராகிமை நீக்க முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்க வேண்டும் என்று தேவேகவுடாவை சில எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். சி.எம்.இப்ராகிம் விவகாரத்தால் அக்கட்சியில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.