பள்ளி பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட மகான்களின் கருத்துகள் சேர்ப்பு; கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில், பள்ளி பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட மகான்களின் கருத்துகள் சேர்க்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பாடநூல் குழு, அம்பேத்கர், பசவண்ணர், பகத்சிங், பெரியார், நாராயணகுரு, தேசியகவி குவெம்பு போன்ற மகான்களின் பாடங்களில் இடம் பெற்று இருந்த சில குறிப்பிட்ட தகவல்களை நீக்கியது. அந்த தகவல்களை தவிர்த்து பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் மகான்களின் தகவல்களை நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. நீக்கப்பட்ட தகவல்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகள் சேர்க்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அம்பேத்கர் உள்ளிட்ட மகான்களின் கருத்துகளை சேர்த்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அரசியல் சாசன சிற்பி என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருந்தது. அந்த வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல் பசவண்ணர், தேசியகவி குவெம்பு, நாராயணகுரு உள்ளிட்டோரின் கருத்துகளும் சேர்க்கப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.