சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை கர்ப்பமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு, ஜூலை.12-
மண்டியா மாவட்டம் நாகமங்களா அருகே பெல்லூரு, ஹரிஜேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 27). இவர், பெங்களூரு ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஹரிஜேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியை பெங்களூருவுக்கு வேலைக்காக மஞ்சுநாத் அழைத்து வந்திருந்தார். பின்னர் தனது சகோதரி வீட்டில் மஞ்சுநாத், சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்டு இருந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு காபி மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து மஞ்சுநாத் கொடுத்ததுடன், அந்த சிறுமியை அவர் பலமுறை தொடர்ந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத் மீது புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். இதுதொடா்பான வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது மஞ்சுநாத் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறி உத்தரவிட்டுள்ளார்.