ஹலகூரில், கனமழைக்கு பொதுமக்கள் பாதிப்பு
ஹலகூரில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹலகூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடலோரம், மலைநாடு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோல் மண்டியா மாவட்டத்திலும் மலவள்ளி, ஹலகூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. தொடர் மழை காரணமாக சிம்ஷா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் நாசமாகியுள்ளது.
குறிப்பாக தொரேகாடுநடு கிராமத்தில் புகுந்த வெள்ளத்தில் ராமசுவாமி, காந்தராஜு, சீனிவாஸ் கவுடா உள்ளிட்டோரின் விளைநிலங்கள் பாழாகியுள்ளது. ஹலகூர் தேசியநெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகனபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் வரமகாலட்சுமி பண்டிகை தேவையான பூஜை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மொத்தத்தில் மழைக்கு ஹலகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். .