பெங்களூருவில், விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பதற்றமான பகுதிகளில் 24 மணிநேரம் பாதுகாப்பு
பெங்களூருவில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பதற்றமான பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆலோசனையும் நடத்தி இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் பதற்றமான பகுதிகளில் உள்ள பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டால், அங்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி துணை போலீஸ் கமிஷனர்களுக்கு, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு துணை போலீஸ் கமிஷனர்களும் தங்களது மண்டலத்தில், எங்கெல்லாம் பதற்றமான பகுதிகளில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துகிறார்களோ, அங்கு 24 மணிநேரமும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். 8 மணிநேரத்திற்கு ஒரு போலீஸ்காரர் என்ற முறையில் பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, கோவிந்தபுரா, சந்திரா லே-அவுட், சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.