ஹாசனாம்பா கோவிலில் 24 மணி நேரமும் திறந்து பூஜைகள் - மந்திரி ராஜண்ணா தகவல்
ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி திறக்கப்படும் ஹாசனாம்பா கோவிலை 24 மணி நேரமும் திறந்து பூஜைகள் நடத்த ஆலோசித்து வருவதாக மந்திரி ராஜண்ணா கூறினார்.
ஹாசன்:-
ஜோதிடர் அல்ல
ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி ராஜண்ணா நேற்று முன்தினம் ஹாசனுக்கு வந்தார். அவர் ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க நான் தயாராக உள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் ஹாசனுக்கு அடிக்கடி வர முடியவில்லை. நான் ஜோதிடர் அல்ல. அதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடக்கப்போகும் சம்பவங்கள் குறித்தும் என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
மதசார்பற்ற கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சி, எதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கி கூற வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு 3 துணை முதல்-மந்திரிகளை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு எடுக்கும். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக காங்கிரஸ் ஆட்சி மீது பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் 2-வது முறையாக விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் விரைவில் பணம் வழங்கப்படும். கிரகஜோதி திட்டமும் அதுபோல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசு மீது ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.
ஹாசனாம்பா கோவில்
இந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் ஹாசனாம்பா உற்சவத்தில் யாருக்கும் தொந்தரவு ஏற்படாமல் புதிய வழிமுறை கையாளப்பட உள்ளது.
இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவிடமும் பேசி இருக்கிறேன். பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புப்படி ஹாசனாம்பா வீதியுலா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஹாசனாம்பாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளது.
24 மணி நேரமும்...
குடிநீர், கழிவறை வசதிகளும், அனைத்து பக்தர்களும் ஹாசனாம்பாவை தரிசிக்க அவகாசமும் வழங்கப்படும். இதுதவிர 24 மணி நேரமும் நடையை திறந்து பூஜைகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ் வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு மந்திரி ராஜண்ணா கூறினார்.