பகலில் காவலன்; இரவில் திருடன்-கைதான போலீசில் பற்றி பரபரப்பு தகவல்


தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதான போலீஸ்காரர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வீடுகளில் கைவரிசை காட்டிய பரபரப்பு தகவல் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு:-

போலீஸ்காரர் கைது

பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் எல்லப்பா (வயது 30). இவர், பூட்டிய வீடுகளில் திருடியதாக ஞானபாரதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் உத்தரவிட்டுள்ளார். எல்லப்பாவிடம் இருந்து 26 கிராம் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான போலீஸ்காரர் எல்லப்பாவை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூதாட்டத்தில் பணம் இழப்பு

எல்லப்பாவின் சொந்த ஊர் பல்லாரி மாவட்டம் சிகுப்பா ஆகும். கடந்த 2016-ம் ஆண்டு அவர் போலீஸ் துறையில் பணிக்கு சேர்ந்திருந்தார். அதன்பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பனசங்கரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அங்கிருந்து விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். எல்லப்பா ஆன்லைன் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். அந்த சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை எல்லப்பா இழந்திருந்தார்.

இதற்காக தனக்கு தெரிந்த நபர்களிடம் ரூ.20 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி இருந்தார். ஒரு புறம் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வந்ததுடன், மறுபுறம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு எல்லப்பாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து, பூட்டி வீடுகளில் எல்லப்பா திருட தொடங்கி உள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் அபிஷேக் என்ற அபியை திருட்டு வழக்குகளில் போலீசார் கைது செய்திருந்தனர்.

ரூ.20 லட்சம் கடனுக்காக...

அப்போது அபிஷேக்குடன், எல்லப்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, 2 பேரும் சேர்ந்து கொண்டு பல்வேறு வீடுகளில் திருடி உள்ளனர். ரூ.20 லட்சம் கடனை அடைக்க இதுபோன்று திருட்டு சம்பவங்களில் எல்லப்பா ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஞானபாரதியில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் எல்லப்பா திருடி இருந்தார். இதற்காக தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை அவர் மாற்றி கைவரிசை காட்டியிருந்தார்.

ஆனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் எல்லப்பாவின் உருவம் பதிவாகி இருந்ததால், ஞானபாரதி போலீசார் எல்லப்பாவை கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பகலில் போலீஸ்காரராக பணியாற்றி எல்லப்பா, இரவில் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story