ஈசுவரப்பா மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க அரசு முயற்சி: டி.கே.சிவக்குமார் பேட்டி
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலையில் ஈசுவரப்பா மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க இந்த அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நீதி விசாரணை
ஊழல் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. சவால் விட்டுள்ளார். ஊழல் குறித்த விவாதத்திற்கு நான் தயார். இந்த விவாதத்தில் நான் பங்கேற்க வேண்டுமா? அல்லது முன்னாள் முதல்-மந்திரி கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் ஈசுவரப்பா மீதான புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஈசுவரப்பா மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க இந்த அரசு முயற்சி செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். பா.ஜனதா ஆட்சியின் ஊழலுக்கு ஒரு இளைஞரின் உயிர் பறிபோய் உள்ளது. இன்னும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. ஈசுவரப்பாவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
பணி நியமனங்கள்
இந்த ஆட்சியில் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விசாரணை நடக்க வேண்டும். கொரோனா நேரத்தில் நடந்த ஊழல், பல்வேறு பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் கமிஷன் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயங்களில் சி.டி.ரவி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.