கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து  வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து ஓய்ந்தது. தொடர்மழையால் அணைகள், ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரத்து 831 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 19 ஆயிரத்து 911 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

10,550 கனஅடி நீர்

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,284 அடி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 598 கன அடி தண்ணீர் வந்தது. அதேபோல் அணையில் இருந்து வினாடிக்கு 10,550 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமகூடலுவில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 30 ஆயிரத்து 461 கன அடி தண்ணீர் தமிழகம் செல்கிறது.


Next Story