பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்


பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி மைசூரு நகரில் பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோராக நடந்தது. பூக்கள், பழங்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மைசூரு:

ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி மைசூரு நகரில் பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோராக நடந்தது. பூக்கள், பழங்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பூக்கள், பழங்கள் விற்பனை

நவராத்திரிையயொட்டி மைசூருவில் தசரா விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். இந்த நிலையில் நவராத்திரி விழாவின் 9-வது நாளான நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், பூசணிக்காய் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நிலையில், வீடுகளில் வைத்து பூஜை செய்ய மைசூரு நகரில் பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், பூசணிக்காய், பொரி-கடலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். குறிப்பாக மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. சாலையோரங்களிலும் பூக்கள், பழங்களை போட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

குறிப்பாக தன்வந்திரி ரோடு, சயாஜிராவ் ரோடு, நாரயணசாஸ்திரி ரோடு, சிட்டி மார்க்கெட், ஜே.ேக. மைதானத்தின் முன்புற சாலை உள்ளிட்ட இடங்களில் பூக்கள், பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

விலை உயர்வால் அதிர்ச்சி

சாதாரண நாட்களை காட்டிலும் பூக்கள், பழங்கள் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது. வழக்கமாக ஒரு முழம் சாமந்தி பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று ஒரு முழம் பூ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், மற்ற பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.

மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் வியாபாரிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மார்க்கெட் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story