செல்போன் கடைக்காரரை கடத்தி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற போலி போலீசார் 5 பேர் கைது
செல்போன் கடைக்காரரை கடத்தி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற போலி போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வி.வி.பரம் பகுதியை சேர்ந்தவர் கவுல்சிங். இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரது காரை, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்தது. பின்னர் தங்களை குற்றப்பிரிவு போலீசார் என கூறி கவுல்சிங்கிடம் அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் தங்கள் காரில் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்றனர். இதையடுத்து அவரிடம் ரூ.5 லட்சம் கொடுக்குமாறும், இல்லையென்றால் போதைப்பொருள் வழக்கில் பெயரை சேர்த்துவிடுவோம் எனவும் கூறி மிரட்டினர். உடனே கவுல்சிங், தனது நண்பர்களை தொடர்பு கொண்டு பணத்தை எடுத்து வருமாறு கூறினார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது கவுல்சிங்கை பணத்திற்காக மர்மகும்பல் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து அறிந்த அந்த கும்பல், உடனடியாக கவுல்சிங்கை அங்கேயே விட்டு சென்றது. பின்னர் அவர் இதுபற்றி வி.வி.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் முகமது காசிம், முஜாகித், வாசீம், சாபீர் உள்பட 5 பேர் என்பதும், அவர்கள் தான் போலியாக போலீசார் என கூறி கவுல்சிங்கை கடத்தியதும் தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.