பிரசவத்தின்போது அதிகப்படியான ரத்தப்போக்கு: சிகிச்சை பலனின்றி பெண் சாவு
பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா தெரேதகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லவி. இவருக்கு திருமணமாகி விட்டது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி பிரசவத்திற்காக கடந்த 6-ந் தேதி துமகூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின்போது ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப்போக்கால் பல்லவி உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பல்லவி இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர், துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்காததால்தான் பல்லவி இறந்துவிட்டதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு திரண்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் குனிகல் டவுனில் உள்ள சாலை, பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த குனிகல் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.