சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு: மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தை கண்டித்து மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டயருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு:
சித்தராமையா கார் மீது...
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று குடகில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட சென்றார். அப்போது பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் சித்தராமையா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை திரும்பி செல்லும்படி வலியுறுத்தினர்.
அத்துடன் பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் சித்தராமையா கார் மீது முட்டையை வீசியதுடன், சாவர்க்கர் படத்தையும் காருக்குள் வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சாலை மறியல் போராட்டம்
இந்த நிலையில் குடகில் சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தை கண்டித்து நேற்று மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு கே.ஆர்.மொகல்லா சர்க்கிளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நடுரோட்டில் டயருக்கு தீவைத்து எரித்தனர். மேலும் அங்கு மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மைசூருவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.