ஆனேக்கல்லில் தசரா ஊர்வலம் கோலாகலம்
ஆனேக்கல்லில் நேற்று தசரா ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
ஆனேக்கல்:
ஆனேக்கல்லில் நேற்று தசரா ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
ஆனேக்கல்லில் தசரா
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் டவுனில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி நாளன்று தசரா விழா ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா மற்றும் தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் சவுடேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்பாரியில் சவுடேஸ்வரி அம்மன் எழுந்தருள, மேடையின் மீது இருந்து முக்கிய பிரமுகர்கள் அம்மன் மீது பூக்களை தூவி தசரா ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலைக்குழுவினர், நடன குழுவினர் அணிவகுக்க ஒரு யானை அம்பாரியை சுமந்து கொண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆனேக்கல் டவுனில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தசரா ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் சவுடேஸ்வரி அம்மனையும் தரிசித்து வழிபட்டனர்.
தசரா ஊர்வலத்தால் ஆனேக்கல் டவுன் நேற்று களை கட்டியது. இந்த ஊர்வலத்தையொட்டி ஆனேக்கல் டவுனில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.