வாலிபரை விடுவிக்க போலீசார் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்களா?: விசாரணைக்கு துணை போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுபான விடுதியில் தகராறில் வாலிபரை விடுவிக்க போலீசார் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்களா? என்பது குறித்து விசாரிக்க துணை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கதிரேனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார்(வயது 23). இவர் கடந்த 27-ந் தேதி மதுபான விடுதியில் வைத்து குடிபோதையில் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குமாரசாமி லே-அவுட் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் வேலை செய்து வந்த கடைக்கு சாதாரண உடை அணிந்து சென்ற 2 போலீஸ்காரர்கள், ரஞ்சித்தை பிடித்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று உள்ளனர்.
இதுபற்றி கேட்ட கடை உரிமையாளர் நாகராஜ் என்பவரை போலீஸ்காரர்கள் அவதூறாக பேசி திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சித்திடம் போலீசார் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு அவரை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டேவிடம் புகார் அளித்தார். அந்த புகாரை உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாசுக்கு அனுப்பி வைத்து உள்ள ஹரீஷ் பாண்டே, போலீசார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.