டெபாசிட் பணம்: இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.5½ கோடி மோசடி


டெபாசிட் பணம்: இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.5½ கோடி மோசடி
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டெபாசிட் பணத்தை கையாடல் செய்ததுடன் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.5½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

டெபாசிட் பணத்தை கையாடல் செய்ததுடன் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.5½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டுறவு வங்கி

பெங்களூரு காந்திபஜார், அவென்யூ சாலை, பசவனகுடி உள்பட 4 இடங்களில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகளின் தலைவராக சதீஷ் என்பவர் இருந்து வருகிறார். இந்த கூட்டுறவு வங்கியில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை சதீஷ், தனது மகன் ஸ்ரீதரின் வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமாக மாற்றி வந்துள்ளார்.

அந்த பணத்தை அவரது மகன் ஸ்ரீதர் பிட்காயினில் முதலீடு செய்துள்ளார். அத்துடன் தனக்கு தெரிந்தவர்கள் உள்பட பலரிடம் பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனவும் கூறி உள்ளார்.

அதை நம்பிய பலரும் அவரிடம் பணத்தை டெபாசிட் செய்தனர். இதற்காக பெங்களூரு பிரபல ஓட்டலுக்கு டெபாசிட் செய்தவர்களை அழைத்து ஸ்ரீதர் பேசி உள்ளார்.

ரூ.5½ கோடி மோசடி

இந்த நிலையில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்பி டெபாசிட் செய்தவர்களிடம் பணம் வசூல் செய்து, ஸ்ரீதர் மோசடி செய்துவிட்டார். அவர் மொத்தம் ரூ.5½ கோடி பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

அதாவது டெபாசிட் செய்தவர்களுக்கு எந்த பணத்தையும் அவர் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுதொடர்பாக ஸ்ரீதர் மீது பணம் டெபாசிட் செய்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் பணத்தை சதீஷ் முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

3 பேர் கைது

அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் முறைகேடு மற்றும் மோசடி வழக்கு தொடர்பாக கூட்டுறவு வங்கி தலைவர் சதீஷ், அவரது மகன் ஸ்ரீதர் மற்றும் தீபக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கூட்டுறவு வங்கி தலைவர் சதீஷ், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை முறைகேடு செய்ததும், ஸ்ரீதர், பலரிடம் பணம் வசூலித்து இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி செய்ததும், அவர்களுக்கு தீபக் என்பவர் உடந்தையாக இருந்ததும் ெதரியவந்தது.

அவர்களிடம் இருந்து 6 கம்ப்யூட்டர்கள், 2 மடிக்கணினிகள், 4 செல்போன்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story