பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து முடிவு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து முடிவு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை நடத்திவிட்டு முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

இந்தியாவை பூர்விகமாக...

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தராமையா ஆர்யரா? திராவிடரா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசி இருப்பது சரியல்ல. முதலில் சித்தராமையா தான் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும். சித்தராமையா ஆர்யரா? அல்லது திராவிடரா? என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பற்றி பேசட்டும்.

பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமரான நேருவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசி இருப்பது சரியல்ல. ஏனெனில் நேரு பிரதமராக இருநதபோது இந்தியா மீது சீனா போர் தொடுத்திருந்தது. அப்போது நமது நாட்டு எல்லைப்பகுதியை சீனாவுக்கு நேரு விட்டு கொடுத்திருந்தார். தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனாவுக்கு விட்டு கொடுக்கவில்லை.

அரசு வேடிக்கை பார்க்காது

நரேந்திர மோடி ஆட்சியில் நமது நாடு உலக அளவில் சக்தி வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், நேருவை ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெலகாவியில் திருமண விழாவில் கன்னட பாடல் ஒலித்ததற்காக கன்னடர்கள் மீது எம்.இ.எஸ். கட்சியினர் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்திய எம்.இ.எஸ். கட்சியினர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கன்னடர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாருக்கும், எம்.இ.எஸ். கட்சிக்கும் உறுதியான தகவலை அனுப்பி வைத்திருக்கிறோம். எம்.இ.எஸ். கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்து ஏதேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால், இந்த அரசு சகித்து கொண்டு வேடிக்கை பார்க்காது. எம்.இ.எஸ். கட்சியினர் மீது எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். பெலகாவியில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்திய எம்.இ.எஸ். கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

விலையை குறைப்பது பற்றி முடிவு

கன்னடர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கிறது. மத்திய அரசு வரியை குறைத்திருப்பதால் சில மாநில அரசுகளும் தாங்களாகவே முன்வந்து விலையை குறைத்திருக்கிறார்கள். கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

கர்நாடகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து சரியான முடிவு எடுக்கப்படும்.

படிப்பில் கவனம்

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் எழுந்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோா்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பை மதித்து ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் மாணவிகள் கவனம் கொடுக்காமல், தங்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகள், பிற கல்வி மையங்களில் ஐகோாட்டு தீர்ப்பை மீறாமல் மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும்.

ஹிஜாப் விவகாரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்களில் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை 99.99 சதவீதம் பேர் பின்பற்றுகிறார்கள். இதுபோல், மற்றவர்களும் ஐகோாட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும். ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலை தூக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள், கல்வித்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன். இந்த விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story