சொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி


சொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

சொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

90 சதவீத விசாரணை

கர்நாடக ஐகோர்ட்டு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த வழக்கில் அந்த இடைக்கால தடையை ஐகோர்ட்டு நேற்று நீ்க்கியது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என் மீது சி.பி.ஐ. விசாரணை அமைப்பினர் சொத்து குவிப்பு வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 90 சதவீத விசாரணையை முடித்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. கூறியுள்ளது. நான், எனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களிடம் சென்று எங்களுடைய சொத்துக்கள் என்ன என்பது சொல்ல வேண்டும். என்னை அழைக்காமலேயே எப்படி 90 சதவீத விசாரணையை முடிததுள்ளனர் என்று எனக்கு தெரியவில்லை.

மரியாதை உள்ளது

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது அரசியல் உள்நோக்கத்துடன் எனது சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. என் மீது வழக்கு பதிவு செய்தது. இதை எதிா்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த தடையை நீக்கியுள்ளனர். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை, மரியாதை உள்ளது.

தேவையான நேரத்தில் உரிய பதிலளிப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும், நான் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story