போலி ஆதார் அட்டைகள் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்
போலி ஆதார் அட்டைகள் சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு:-
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சி.பி.ஐ. விசாரணை
போலியாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை தயாரித்ததாக தனியார் நிறுவன நிர்வாகி மவுனிஸ்குமார், அவரது ஆதரவாளர்கள் பகத், ராகவேந்திரா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை பார்க்கும்போது, போலி ஆதார் அட்டைகளை தயாரிப்பது என்பது மிகப்பெரிய குற்றம்.
கைது செய்யப்பட்டவர்கள் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேசின் நெருங்கிய ஆதரவாளர்கள். இந்த விவகாரம் முக்கியமானது என்பதால் இதை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க முடியாது. இதுகுறித்து சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. தான் விசாரிக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனம் தயாரித்த ஆதார் அட்டைகளை ரத்து செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அரசியல் விஷயம்
கைதானவர்களை வெளியில் தப்ப விடக்கூடாது. ஏனெனில் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. இது சமூகத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ஆதார் எண் உருவாக்க பிறப்பு சான்றிதழ் வேண்டும். ஆனால் இந்த நிறுவனத்தில், அந்த சான்றிதழ் இல்லாமலேயே ஆதார் அட்டையை தயாரித்துள்ளனர் என்றதால், அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு எத்தகையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் இந்த ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இந்த மோசடி எங்கெங்கு பரவியுள்ளது என்பதை கண்டறிய வேண்டியது அவசியம். யார்-யாருக்கு இந்த அட்டையை வழங்கியுள்ளனர், அதனால் என்ன பிரச்சினைகள் எழுந்தது என்பது குறித்து தெரிய வேண்டும்.
மந்திரி பைரதி சுரேஷ்
சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வலியுறுத்துவோம். இந்த விவகாரத்தை முதல்-மந்திரி சித்தராமையா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மந்திரி பைரதி சுரேசிடம் விசாரணை நடைபெற வேண்டும். கைதான மவுனிஸ்குமார் யார்? என்று தனக்கு தெரியாது என மந்திரி பைரதி சுரேஷ் கூறியுள்ளார். ஆனால் அந்த நபரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மந்திரி பைரதி சுரேஷ் பயணம் செய்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதனால் கைதான நபர், மந்திரிக்கு நன்கு பழக்கமானவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.