வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஈசுவரப்பா மீது வழக்கு
சிவமொக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீலாது நபி பண்டிகை
சிவமொக்கா டவுன் ராகிகுட்டா பகுதியில் மீலாது நபி பண்டிகை ஊர்வலத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதில் இந்து மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா, இந்து அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் சிவமொக்கா டவுன் பாலராஜ அர்ஸ் சாலையில் பா.ஜனதா சார்பில் நடந்தது. இதற்கு முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தலைமை தாங்கினார்.
அப்போது போராட்டத்தில் அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு பஜ்ரங்தள தொண்டர் ஹர்ஷா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்து மக்கள் இடையே கொந்தளிப்ைப ஏற்படுத்தியது. அவர்கள் பொங்கி எழுந்து இருந்தால் மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு ஆடு, கோழிகளை பலியிடுவது போல் வெட்டி சாய்த்து இருப்பார்கள். கர்நாடக பெண்கள் ஜான்சி ராணி, கித்தூர் ராணி சென்னம்மா போன்ற வீர மங்கைகள் ரத்தம் சிந்திய வழியில் வந்தவர்கள்.
பொங்கி கொள்ள முடியாது
அவர்களை (இந்து மக்கள்) சீண்டி பார்க்காதீர்கள். அவர்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் தாங்கி கொள்ள முடியாது. கொன்று குவித்து இருப்பார்கள், என்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த பலர் ஈசுவரப்பாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கையும் விடுத்தனர்.
இந்தநிலையில், வன்முறையை தூண்டும் வகையில் ஈசுவரப்பா பேசியதாக ஜெயநகர் போலீசார் தாமாக முன்வந்து 153 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.