தொழில்அதிபரை கொன்று நகைகள் கொள்ளை: வேலைக்காரர் உள்பட 4 பேர் கைது


தொழில்அதிபரை கொன்று நகைகள் கொள்ளை:  வேலைக்காரர் உள்பட 4 பேர் கைது
x

பெங்களூருவில் தொழில் அதிபரை கொன்று நகைகளை ெகாள்ளையடித்த வேலைக்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4¼ கோடி தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு:

தொழில்அதிபர் படுகொலை

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பெங்களூரு சாம்ராஜ்பேட்டை 4-வது பிளாக், 4-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டின் 3-வது தளத்தில் வசித்து வந்தவர் ஜக்குராஜ் ஜெயின் (வயது 74). தொழில்அதிபரான இவர், சிக்பேட்டையில் எலெக்ட்ரீக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார். ஜக்குராஜின் மகன் பிரகாஷ் சந்த். இவர், அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி ஜக்குராஜின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதுபற்றி அறிந்த பிரகாஷ் சந்த், உறவினர்கள் சாம்ராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் ஜக்குராஜ் வீட்டிற்கு சென்று பார்த்த போது படுக்கை அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குஜராத்தில் கைது

ஜக்குராஜை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகள், பணம், வெள்ளி பொருட்களை வேலைக்காரர் பிஜாராம் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் பிஜாராமின் கூட்டாளிகள் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

மேலும் பிஜாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து வடமாநில போலீசாருக்கு, சாம்ராஜ்பேட்டை போலீசார் தகவல் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் பால்னாபுரா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் சென்ற பிஜாராமை சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்த போது ஜக்குராமை கொலை செய்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்ததை பிஜாராம் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

ரூ.4¼ கோடி நகைகள் பறிமுதல்

இதுபற்றி சாம்ராஜ்பேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குஜராத் சென்ற சாம்ராஜ்பேட்டை போலீசார் பிஜாராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகை, பணம், வெள்ளி பொருட்களை கோவாவில் உள்ள ஒரு விடுதியில் பதுக்கி வைத்திருப்பதும், அந்த விடுதியில் கூட்டாளிகளான மகேந்திரா, ஓம்பிரகாஷ், பூரன்ராம், ஓரம்தேவசி ஆகியோர் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த விடுதிக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த ஓரம் தப்பி சென்று விட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 8¾ கிலோ தங்கநகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள், ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகளின் மதிப்பு ரூ.4¼ கோடி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story