லஞ்சம் வாங்கிய பி.டி.ஏ. உதவி என்ஜினீயர் கைது


லஞ்சம் வாங்கிய பி.டி.ஏ. உதவி என்ஜினீயர் கைது
x

பெங்களூருவில், லஞ்சம் வாங்கிய பி.டி.ஏ. உதவி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள பெங்களூரு பெருநகர வளர்ச்சி ஆணைய(பி.டி.ஏ.) அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ராஜூ. தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் பி.டி.ஏ. சார்பில் லே-அவுட் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அந்த தொழில் அதிபரின் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கையகப்படுத்திய நிலத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று தொழில் அதிபரிடம், ராஜூ கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட தொழில் அதிபர் முதற்கட்டமாக ரூ.60 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழில் அதிபர், உதவி என்ஜினீயர் ராஜூ மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்தார். அப்போது தொழில் அதிபருக்கு சில ஆலோசனைகள் கூறிய ஊழல் தடுப்பு படையினர் அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை ராஜூ வாங்கிய போது அவரை ஊழல் தடுப்பு படை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான ராஜூ மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story