பெங்களூருவில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்; சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தல்


பெங்களூருவில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்; சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
x

காண்டிராக்டர்கள் வீடுகளில் ரூ.95 கோடி சிக்கிய விவகாரத்தில் முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூரு:

காண்டிராக்டர்கள் வீடுகளில் ரூ.95 கோடி சிக்கிய விவகாரத்தில் முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூருவில் 2 காண்டிராக்டர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.95 கோடி சிக்கியது. இந்த பணம் காங்கிரசுக்கு சேர்ந்தது என்று பா.ஜனதா குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கோரி பா.ஜனதா சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகத்திற்கு அவப்பெயர்

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடா, தலித் அணி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

வருமான வரி சோதனையில் ரூ.90 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது. இந்த பணம் யாருடையது என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாத அரசு இங்கு உள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கர்நாடகத்திற்கு அவப்பெயரை இந்த அரசு ஏற்படுத்துகிறது. இந்த அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அரசு கவலைப்படவில்லை

சட்டவிரோத பணம் பதுக்கலுக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். பெயருக்கு சில உத்தரவாத திட்டங்களை செயல்படுத்திவிட்டு மாநிலத்தை கொள்ளையடிக்கிறார்கள். எந்த குற்றச்சாட்டு எழுந்தாலும், அதை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கிறார்கள். காண்டிராக்டர்கள், கட்டுமான தொழில் செய்வோரிடம் இருந்து பணத்தை பறிக்கிறார்கள். மாநிலத்தில் ஊழல் மிதமிஞ்சிவிட்டது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story