'பிக்பாஸ்' போட்டியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
புலி நகம் வைத்திருந்த விவகாரத்தில் கைதான பிக்பாஸ் போட்டியாளர் வர்த்தூர் சந்தோசிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
தனியார் நிகழ்ச்சி
கர்நாடகத்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை கன்னட நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வர்த்தூர் சந்தோஷ் என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கழுத்தில் புலி நகத்துடன் கூடிய சங்கிலியை அணிந்திருந்தார். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சென்று சந்தோசை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தன்னிடம் இருப்பது உண்மையான புலி நகம் என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
நடிகர்களும் சிக்கினர்
மேலும் அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். வர்த்தூர் சந்தோஷ், அனைத்திந்திய ஹுலிகர் இன மாடுகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஆவார்.
இதற்கிடையே கர்நாடகத்தில் புலி நகம், தோல் ஆகியவற்றை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ஜக்கேஷ், தர்ஷன், நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் வீடுகளில் வனத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் புலி நகங்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இந்த விவகாரம் கர்நாடகத்தில் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வர்த்தூர் சந்தோஷ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூருவில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
பின்னர் நீதிபதி, வர்த்தூர் சந்தோசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க, அவருக்கு ரூ.4 ஆயிரத்திற்கான ஒரு நபர் உத்தரவாத பத்திரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். அதன்படி உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வர்த்தூர் சந்தோசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறையில் இருந்து விடுதலை
இந்த நிலையில் வர்த்தூர் சந்தோஷ், நேற்று இரவு 7 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் சிறை வாசலில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வர்த்தூர் சந்தோசிற்கு மாலை, தலைப்பாகை, சால்வை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.