பெங்களூரு கம்பளா போட்டி மைதானத்துக்கு பூமி பூஜை-டி.கே.சிவக்குமார் அடிக்கல் நாட்டினார்
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கம்பளா போட்டி மைதானத்துக்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு:-
கம்பளாவுக்கு பூமி பூஜை
கடலோர மாவட்டங்களில் கம்பளா போட்டி பிரசித்தி பெற்றதாகும். அந்த கம்பளா போட்டியை பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரு கம்பளா மற்றும் நம்ம கம்பளா குழுவினர் இணைந்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இந்த ஆண்டு கம்பளா போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கம்பளா போட்டி நடத்துவதற்காக அரண்மனை மைதானத்தில் புதிதாக அமைக்கப்படும் சிறிய அளவிலான கம்பளா மைதானத்திற்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜைக்காக அடிக்கல் நாட்டினார். இதில், முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு உறுதுணையாக இருக்கும்
பின்னர் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுகையில், 'கடலோர மாவட்டங்களின் பண்பாடு, கலாசாரம் நமது மாநிலத்தின் பெருமை ஆகும். அங்கு நடைபெறும் கம்பளா போட்டிகளும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படிப்பட்ட கம்பளா போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதற்கான சிறிய அளவிலான மைதானத்தை அரண்மனை மைதானத்தில் அமைக்க உள்ளோம். இதற்கான அனைத்து உதவிகளையும் மாநகராட்சி செய்து கொடுக்கும்.
கடலோர மாவட்டங்களில், அவர்களது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க பாடுபடுகிறார்கள். இதற்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இதற்கு முன்பு சதானந்தகவுடா முதல்-மந்திரியாக இருந்த போது கம்பளா போட்டிக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு கம்பளா போட்டிக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் 20 போட்டிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது', என்றார்.