கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது.
இதய அறுவை சிகிச்சை
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை (வயது 63). அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதய அறுவை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பெங்களூருவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்று காலை 6 மணியளவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த மருத்துவமனையின் இதய நோய் பிரிவு தலைவர் விவேக் ஜவலி தலைமையிலான டாக்டர்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்தனர். அறுவை சிகிச்சை முடிவடைந்த பிறகு பசவராஜ் பொம்மை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சிறப்பு வார்டு
தற்போது அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் உள்ளார். அடுத்த 3 நாட்களில் அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, 'பசவராஜ் பொம்மை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டதும் நான் நேரில் சென்று அவரை பார்ப்பேன். அவர் விரைவாக குணம் அடைய வாழ்த்துகிறேன்" என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ., அவர் விரைவாக குணம் அடைய வாழ்த்து கூறியுள்ளார்.
மூட்டு வலிக்கு பல்வேறு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டார். நாட்டு மருத்துவ சிகிச்சையும் அவர் பெற்றார். ஆனால் அவருக்கு மூட்டு வலி பிரச்சினை தீரவில்லை. அதனால் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதய நோய் பிரச்சினை முழுமையாக சரியானதும், அவர் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.