திருடன் என நினைத்து வங்கி ஊழியர் அடித்து கொலை; அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கைது


திருடன் என நினைத்து வங்கி ஊழியர் அடித்து கொலை; அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கைது
x

பெங்களூருவில், திருடன் என நினைத்து வங்கி ஊழியரை கட்டையால் அடித்து கொலை செய்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

வங்கி ஊழியர்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அபிப் பாஷா (வயது 24). இவர் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பெங்களூருவுக்கு வேலை விஷயமாக அபிப் பாஷா வந்து இருந்தார். எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாரத்தஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பரின் வீட்டில் அபிப் பாஷா தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மற்ற நண்பர்களுடன் வெளியே சென்ற அபிப் பாஷா, மதுபான விடுதிக்கு சென்று மதுஅருந்தி உள்ளார். பின்னர் நண்பர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அபிப் பாஷா வந்தார். ஆனால் குடிபோதையில் இருந்ததால் நண்பர் வீடு எந்த மாடியில் உள்ளது என்று அபிப் பாஷாவுக்கு தெரியவில்லை. இதனால் அவர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வந்து உள்ளார்.

அடித்து கொலை

அப்போது அங்கு இருந்த காவலாளி ஷியாம்நாத், அபிப் பாஷாவிடம் அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றி திரிவது பற்றி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு பதில்அளிக்காமல் அங்கிருந்து அபிப் பாஷா ஓட முயன்று உள்ளார். இதனால் அபிப் பாஷாவை, அங்கு கிடந்த மரக்கட்டையால் ஷியாம்நாத் தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அபிப் பாஷா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் எச்.ஏ.எல். போலீசார் அங்கு சென்று அபிப் பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஷியாம்நாத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருடன் என்று நினைத்து அபிப் பாஷாவை கட்டையால் அடித்து கொன்றதை ஷியாம்நாத் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story