ஆனேக்கல்லில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் சட்டம் பற்றி விழிப்புணர்வு
ஆனேக்கல்லில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் சட்டம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆனேக்கல்:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் டாக்டர் கோபாலராஜூ கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் சட்டம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநில மகளிர் ஆணைய தலைவி பிரமிளா நாயுடு கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
இளமைப்பருவத்தில் வழிதவறாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
காதல் என்ற பெயரில் எதிர்காலத்தை ெதாலைத்துவிடாதீர்கள். மாணவர்கள் கல்வி இலக்குகளை அடைந்து பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுவடைய வேண்டும். சமீபகாலமாக பெண்கள் அளித்த புகாரின் பேரில் 5,000 வழக்குகளை மகளிர் ஆணையம் தீர்த்து வைத்துள்ளது. வாழ்க்கையின் நோக்கத்தை அடைய முடியாமல் பலர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். தைரியம், பெண்களின் ஆயுதங்களாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இதை பயன்படுத்தி முன்னேற வேண்டும். கல்லூரிகளில் வாரம் ஒருமுறை பெண்களுக்கான நெறிமுறை பாடம் நடத்த வேண்டும். விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லுநர்களால் வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனை திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் தற்போதும் பெண்களின் அதிகாரம் மற்றும் உரிமைக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. பெண்களின் பாதுகாப்பில் மகளிர் ஆணையம் உறுதியாக உள்ளது. பெண்கள், சட்டம் பற்றி தெரிந்துகொண்டு விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.