ஆட்டோ-கார் மோதல்; டிரைவர் உள்பட 3 பேர் சாவு
ஹலகூர் அருகே பயணிகள் ஆட்டோ-கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மண்டியா:
ஆட்டோ-கார் மோதல்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா மாரேனஹள்ளி அருகே குனிக்கல் ஹாலா பகுதியில் கார் ஒன்று எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மலவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
பெங்களூருவை சேர்ந்தவர்கள்
பின்னர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது பெங்களூருவை சேர்ந்த ரவி குமார்(வயது 50), பாஸ்கர்(48) மற்றும் மலவள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(35) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.