ரேவண்ணாவின் ஆதரவாளரை கடத்த முயற்சி


ரேவண்ணாவின் ஆதரவாளரை கடத்த முயற்சி
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் ஆதரவாளரை கடத்த முயற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் கைது

ஹாசன்:

முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் ஆதரவாளரை கடத்த முயன்ற வழக்கில் கோலார் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆயுதங்களால் தாக்கி கடத்த முயற்சி

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுராவை சேர்ந்தவர் அஸ்வத்நாராணகவுடா. இவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் ஆதரவாளர் ஆவார். மேலும் ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

இவர் கடந்த 10-ந் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த கும்பல் இவரது வாகனத்தை வழிமறித்து அஸ்வத்நாராயணகவுடாவை சரமாரியாக தாக்கினர்.

மேலும் பணம் கேட்டு மிரட்டி கடத்த முயன்றனர். இருப்பினும் அவரது கூச்சல் சத்தம் ேகட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அஸ்வத்நாராயணகவுடா ஒலேநரசிபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார், கும்பலை சேர்ந்தவர்களை தேடி வந்தனர்.

7 பேர் கைது

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த சதீஷ், முருகன், மதுசூதன், அசோக், சென்னராயப்பட்டணாவை சேர்ந்த தேஜஸ்வி, அரவிந்த் என்பது தெரியவந்தது. மேலும் ரோஹித், பிரவீன் ஆகியோர் தலைமறைவாகவுள்ளனர். கைதானவர்களில் அசோக் கோலார் மாவட்ட உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடத்தல் கும்பலுக்கு இவர் உதவி செய்ததாக கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் தலைமறைவாக உள்ள ரோஹித் மற்றும் பிரவீன் ஏற்கனவே 2020-ம் ஆண்டு வர்த்தூர் பிரகாஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

அஸ்வத்நாராயணகவுடா கடத்தலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஒலேநரசிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story