அம்ருத கங்கா குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: மந்திரி பைரதி பசவராஜ் உத்தரவு
சிக்கமகளூருவில், அம்ருத கங்கா குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மந்திரி பைரதி பசவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு:
கனமழையால் பாதிப்பு
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. மேலும் விளைநிலத்திற்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மந்திரி பைரதி பசவராஜ், சிக்கமகளூருவில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கொப்பா தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கினார். இதைதொடர்ந்து அவர், மாவட்ட கலெக்டரிடம் மழைபாதிப்பு குறித்து ஆலோசனை நடத்திவிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்கமகளூருவில் அம்ருத கங்கா குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டேன். 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் பணிகளை விரைவில் முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். பணிகள் தாமதமாவதற்கு காரணமாக காண்டிராக்டர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படியும் கூறியுள்ளேன்.
537 வீடுகள் சேதம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் இதுவரை மழைக்கு 537 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 403 வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக ரூ.10 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கனமழைக்கு 2 பேர் இறந்தனர். 2 பசுமாடுகள் அடித்து செல்லப்பட்டது. 1,600 கி.மீ வரையிலான சாலைகள் சேதமடைந்துள்ளது. விரைவில் அந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணத்தொகையை உடனே வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குட்டேதொட்டா பகுதியில் மழையால் வீடுகளை இழந்த மக்களை, வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். வீட்டு வாடகை தொகையை அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து மந்திரி பைரதி பசவராஜ், என்.ஆர்.புரா தாலுகா சவுதிகெரே கிராமத்தில் அமைக்கப்பட்ட மர பூங்காவை(ட்ரீ பார்க்)ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கலெக்டர் ரமேஷ், ராஜேகவுடா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.