அம்பேத்கர் சிலை, பவன் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து-கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு


அம்பேத்கர் சிலை, பவன் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து-கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு
x

அம்பேத்கர் சிலை, சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதியை அகற்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு நடக்கிறது.

கோலார் தங்கவயல்:

ஐகோர்ட்டு தீர்ப்பு

கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை அம்பேத்கர் பூங்காவில் அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதி ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றவும், புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் பவனை இடிக்கவும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவு, அதற்கு காரணமானவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலார் தங்கவயலில் 9-ந்தேதி(இன்று) முழு அடைப்பு நடந்த அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஆதரவு

இதற்காக போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான கே.சி.முரளி தலைமையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர்களின் ஒருவரான கே. ராஜேந்திரன், அம்பேத்கர் தினப்பயணிகள் சங்க தலைவர் முத்துமாணிக்கம், தலித் சங்கர்ஷ சமிதி மாவட்ட தலைவர் ஏ.பி.எல். ரங்கநாத், ஆட்டோ சங்க தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பி.இ.எம்.எல். தொழிற்சங்க தலைவர் ஆஞ்சநேய ரெட்டியை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டார்கள்.

இதை ஏற்ற ஆஞ்சநேயரெட்டி பி.இ.எம்.எல். நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல் தனியார் பஸ் நிர்வாகம், ஆட்டோ சங்க நிர்வாகம், வியாபாரிகள், திரையரங்குகள், வாடகை கார் ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி இன்று முழு அடைப்பு நடக்கிறது.

அசம்பாவிதங்கள்...

முழு அடைப்பு தொடர்பாக கோலார் தங்கவயல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இன்று நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழு அடைப்பை காரணம் காட்டி வன்முறையை தூண்ட முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story