சாமுண்டீஸ்வரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்


சாமுண்டீஸ்வரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி  கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
x

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆடி வெள்ளி பூஜைகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்துள்ளார்.

மைசூரு:

சாமுண்டீஸ்வரி கோவில்

மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது.கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஆடி வெள்ளி பூஜைகள்

இந்த நிலையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதில் ஏராளமான

பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் சாமுண்டீஸ்வரி வருடாந்திர உற்சவம் நடக்கும். இதில் சாமுண்டீஸ்வரி விற்றிருக்கும் தேரோட்டம் நடக்கும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிவெள்ளி பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதி இன்றி எளிமையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு கன்னடா வருடபிறப்பில் அடுத்த மாதம்(ஜூலை) ஆடி பிறக்கிறது. இதில் 1, 8, 15, 22-ந்தேதிகளில் வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அதன்படி ஆடி மாதத்தையொட்டி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த முன்ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்

சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஆடி வெள்ளி பூஜைகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும் 4-வது அலை தடுக்கும் வகையில் ஆடி வெள்ளி பூஜைகளில் கலந்துகொள்ள கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் 72 மணிநேரத்தில் பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். இந்த நிபந்தனைகளை கடைப்பிடித்து வந்தால்தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும்.

இதற்கிடையே கடந்த 20-ந்தேதி வருடாந்திர உற்சவம் நடக்கும். இதையொட்டி கோவிலில் தேர் திருவிழா நடக்கும். ஆடி வெள்ளி பூஜையையொட்டி சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது கலெக்டர் பகாதி கவுதம், பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.


Next Story