நடிகை சைத்ரா தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை-கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை சைத்ரா தொடர்ந்த வழக்கில் கணவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது..
பெங்களூரு:
நடிகை சைத்ரா புகார்
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சைத்ரா. இவரது கணவர் பாலாஜி போத்ராஜ். இவர், தொழில்அதிபர் ஆவார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் நடிகை சைத்ராவிடம் இருந்து விவாகரத்து கேட்டு பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் தனது கணவர் பாலாஜி மற்றும் மாமனார் போத்ராஜ் மீது பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா புகார் அளித்தார். அதில், தன்னை கணவரும், மாமனாரும் கொடுமைப்படுத்துவதாக புகாரில் கூறி இருந்தார். அத்துடன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.14 லட்சத்தை எடுத்து பாலாஜி மோசடி செய்து விட்டதாகவும் நடிகை சைத்ரா கூறி இருந்தார்.
விசாரணைக்கு இடைக்கால தடை
அந்த புகாரின் பேரில் ஒயிட்பீல்டு போலீசார், பாலாஜி மற்றும் போத்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தன் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில் பதிவான வழக்கு, கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் பாலாஜியும், அவரது தந்தை போத்ராஜும் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பாலாஜி மீது பெங்களூரு கீழ் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் உத்தரவிட்டுள்ளார்.