கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x

கோலார் தங்கவயலில், சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என கல்வித்துறைக்கு லோக் அயுக்தா சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

கோலார் தங்கவயல்:-

குறைகேட்பு நிகழ்ச்சி

கோலார் தங்கவயல் தாலுகா ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஜார்ஜ் மன்னர் அரங்கில் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோலார் மாவட்ட லோக் அயுக்தா சூப்பிரண்டு வெங்கடேஷ், தாசில்தார் சுஜாதா, கல்வி அதிகாரி மேகநாத், நகரசபை கமிஷனர் நவீன் சந்திரா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அப்போது மனுதாரர் ஒருவர் கொடுத்த மனுவை சூப்பிரண்டு பரீசிலனை நடத்தினார். அதில் தங்கவயல் தாலுகா மதுனேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த பள்ளிகூடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் சிதிலமடைந்துள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிதாக பள்ளிக்கூட கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

கடும் நடவடிக்கை

இந்த மனுவை விசாரித்த பின்னர், சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக அகற்றவும், அங்கு அரசு சார்பில் புதிய பள்ளிக்கூட கட்டிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு, லோக் அயுக்தா சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதேபோல் பொதுமக்கள் வழங்கிய முதியோர் ஓய்வூதியம், ரேஷன் அட்டைகள், சாதி மற்றும் வருவாய் சான்றிதழ்கள் போன்ற அரசு சார்ந்த பணிகளுக்கு பெறப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அரசு சான்றிதழ்கள் பெற இடைத்தரகர்கள் செயல்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story