ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை 'அபேஸ்' செய்த வாலிபர் கைது-சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர்


ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது-சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர்
x

மைசூருவில் எச்.டி.எப்.சி. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

மைசூரு:

ஆன்லைன் மூலம்...

மைசூரு டவுனில் எச்.டி.எப்.சி. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலமாக ஒருவர் ரூ.21 லட்சத்து 2 ஆயிரத்து 41-ஐ அபேஸ் செய்து இருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதையடுத்து வங்கி அதிகாரிகள் இதுபற்றி மைசூரு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 24-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நடந்தது.

வாலிபர் கைது

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு வாலிபர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.15.70 லட்சத்தை மீட்டனர். அந்த வாலிபர் நூதன முறையில் எச்.டி.எப்.சி. வங்கியின் வாடிக்கையாளர்களுடைய ஏ.டி.எம். கார்டு மற்றும் அதன் குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு இருந்தார். அவர் தான் அபேஸ் செய்த பணத்தை ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தார்.

மேலும் ஆன்லைன் மூலம் ஏராளமான பொருட்களையும் வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி வீட்டுக்கு தேவையான டி.வி., குளிர்சாதன பெட்டி, கேமராக்கள் மற்றும் மின்சாதன கருவிகள், எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கி இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story