தீவுபோல் மாறிய ஆசிரமத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியீடு


தீவுபோல் மாறிய ஆசிரமத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியீடு
x

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் தீவுபோல் மாறிய ஆசிரமத்தில் 15 பேர் சிக்கி தவிக்கிறார்கள். தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அவர்கள் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

பெங்களூரு:

காவிரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதுபோல் காவிரி ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 84 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மண்டியா அருகே காவிரி ஆற்றின் நடுவே தீவுபோல் சர்வதர்ம ஆசிரமம் அமைந்துள்ளது.

மீண்டு வர முடியாமல்...

அந்த ஆசிரமத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர், பக்தர்கள், ஆசிரம நிர்வாகிகள் என மொத்தம் 15 பேர் கடந்த 6 நாட்களாக தங்கி உள்ளனர். அவர்கள் குரு பூர்ணிமாவையொட்டி அங்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் சர்வதர்ம ஆசிரமத்துக்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்குள்ள 15 பேரும் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள், 'எங்களுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு தேவையான உணவு இருப்பு உள்ளது. நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எந்த பிரச்சினையும் எங்களுக்கு ஏற்படவில்லை. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இங்கு நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பயப்பட வேண்டாம்

நாங்கள் இங்கு தோட்ட வேலையில் ஈடுபட்டு பொழுதை கழித்து வருகிறோம். கடந்த 1991-ம் ஆண்டும் இதேபோல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆசிரமத்தில் சிக்கி இருந்தோம். பின்னர் மீட்கப்பட்டோம். எங்களிடம் மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்பில் உள்ளனர்.

உணவு உள்பட எந்த உதவி வேண்டுமானாலும் உடனடியாக கேட்குமாறும், பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் நாங்கள் ஆதங்கத்தில் இல்லை. மாவட்ட நிர்வாகிகள் தினமும் எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளனர்.


Next Story