குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு காப்பாற்ற முயன்ற வாலிபரும் உயிரிழந்த சோகம்
ஆனேக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான். காப்பாற்ற முயன்ற வாலிபரும் உயிரிழந்த சோகச்சம்பவம் நடந்துள்ளது.
ஆனேக்கல்:
குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஆடிகாரஹள்ளி பகுதியில் முகமது அஜான் (வயது 8) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். இந்த நிலையில் சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த குளத்தின் அருகில் விளையாடி
கொண்டிருந்தான். அப்போது சிறுவன் முகமது அஜான், கால் தவறி குளத்திற்குள் தவறி விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக வந்த சாஜீத் (25) என்ற வாலிபர் சிறுவனை காப்பாற்ற குளத்திற்குள் குதித்தார். அப்போது அவரும் குளத்தில் மூழ்கி தத்தளித்து காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீரில் தத்தளித்த 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து 2 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோகம்
இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் குளத்தில் மூழ்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.