மேகதாது பகுதியில், சாம்ராஜ்நகர் கலெக்டர் திடீர் ஆய்வு
மேகதாது பகுதியில் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் திடீரென ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளேகால்:
மேகதாதுவில் புதிய அணை
காவிரி ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பாய்ந்தோடி கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று சாம்ராஜ்நகர் - ராம்நகர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மேகதாது பகுதிக்கு சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் எல்லையில் காவிரியுடன், பாலாறு சங்கமிக்கும் இடத்தையும், ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியையும் பார்வையிட்டார். அப்போது அவருடன் காவிரி வனத்துறை அதிகாரி அங்கராஜு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனரமைப்பு பணிகள்
இதுபற்றி வனத்துறை அதிகாரி அங்கராஜு நிருபர்களிடம் கூறுகையில், 'கலெக்டரின் இந்த திடீர் ஆய்வு மேகதாது அணை கட்டும் சம்பந்தமாக நடந்தது அல்ல. அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எல்லையில் உள்ள இந்த இடத்தை பார்ப்பதற்காக வந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் நாங்களும்(வனத்துறையினர்) அவருடன் வந்தோம்' என்று கூறினார்.
இதுபற்றி கலெக்டர் சாருலதா சோமல் கூறுகையில், 'அரசு விருந்தினர் மாளிகையை புனரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் அரசு விருந்தினர் மாளிகையை பார்வையிட்டு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்' என்று கூறினார்.