சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ரூ.90 லட்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 பேரிடம், பெங்களூருவில் கைதான போலீஸ் அதிகாரி ரூ.90 லட்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது. அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
ரூ.90 லட்சம் பெற்றது அம்பலம்
கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று முன்தினம் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஹரீசை கைது செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த 2 நபர்களிடம், ஹரீஷ் ரூ.90 லட்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. அதாவது சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ், பெங்களூரு ஹெக்கனஹள்ளியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும் மது மற்றும் திலீப்குமார் ஆகிய 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர்கள் 2 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர்.
25 நாட்கள் விடுமுறை
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தான் தேர்ச்சி பெற வைப்பதாக ஹரீஷ் கூறியுள்ளார். இதற்காக மதுவிடம் இருந்து ரூ.40 லட்சமும், திலீப் குமாரிடம் இருந்து ரூ.50 லட்சத்தையும் ஹரீஷ் வாங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மதுவும், திலீப்குமாரும் கைதானதும், இந்த முறைகேட்டில் தான் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்ததும் திடீரென்று 25 நாட்கள் விடுமுறையில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ் சென்றுவிட்டார். இதனால் சந்தேகமடைந்த சி.ஐ.டி. போலீசார், அவரை கண்காணித்து நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
கைதான ஹரீசிடம் ரூ.90 லட்சத்தை வேறு யாருக்கெல்லாம் கொடுத்தார்?, தற்போது அந்த பணம் யாரிடம் உள்ளது?, முறைகேட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? உள்ளிடவை குறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.