சரக்கு வாகனத்தில் கடத்திய 750 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது
தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 750 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக ஆனேக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சரக்கு வாகனத்தில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சர்ஜாபூரை சேர்ந்த பசீர் அகமது, நிசாம் மற்றும் டொசித் என்பதும், தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 750 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.