ராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்கவே 54 மணிநேரம் விசாரணை; சித்தராமையா குற்றச்சாட்டு


ராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்கவே 54 மணிநேரம் விசாரணை; சித்தராமையா குற்றச்சாட்டு
x

‘நேஷனல் ஹெரால்டு’ முடிந்து போன வழக்கு என்றும், ராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்கவே 54 மணிநேரம் விசாரணை நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ராகுல்காந்திக்கு தொல்லை

காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அழைப்பின் காரணமாக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் பிற தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் டெல்லி வந்துள்ளனர். 'நேஷனல் ஹெரால்டு' முடிந்து போன வழக்கு. அந்த வழக்கில் தற்போது ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனியா காந்தியையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு சாதாரண வழக்கில் 4 அல்லது 5 மணிநேரம் விசாரணை நடத்தி தகவல்களை பெறலாம். ஆனால் ராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் 54 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராகுல்காந்தியிடம் நடத்தப்படும் விசாரணையில், அமலாக்கத்துறையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது.

தகுதி இல்லை

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் போராட்டம் நடத்தப்படும். நாளை (அதாவது இன்று) ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஆர்.எஸ்.எஸ்.' என்றாலே பொய் தான். அவர்களிடம் இருந்து தான் பொய் பிறந்துள்ளது. சி.டி.ரவியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தான். அவரது வாயில் இருந்து பொய் மட்டுமே வரும். என்னை பற்றி பேசுவதற்கு சி.டி.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story