லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு கலெக்டராக பணியாற்றிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைது


லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு கலெக்டராக பணியாற்றிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைது
x

அரசு நில ஆக்கிரமிப்பு, லஞ்சம் வாங்கியதாக கடந்த 10 ஆண்டுகளில் பெங்களூரு கலெக்டராக பணியாற்றிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு கலெக்டர்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருவில் தான் கர்நாடக அரசின் அதிகார மையமான விதான சவுதாவும் அமைந்து உள்ளது. இதனால் பெங்களூரு நகர கலெக்டராக பணியாற்றுவது என்பது பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பெங்களூரு நகர கலெக்டராக பணியாற்றிய 3 பேர் லஞ்சம், மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு நகர கலெக்டராக பணியாற்றியவர் அய்யப்பா. இவர் மீது பெங்களூரு விமான நிலையம் அருகே மடப்பனஹள்ளியில் 32 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவர் பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் விசாரித்து வந்தனர். கலெக்டராக இருந்த அய்யப்பாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்து இருந்தனர்.

தற்கொலை

இதுபோல கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூரு கலெக்டராக பணியாற்றி வந்த விஜய்சங்கர் மீது ஐ.எம்.ஏ. நகைக்கடை மோசடி வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கினார் என்று கூறப்பட்டது. இதனால் அவரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்து இருந்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோல சமீபத்தில் பெங்களூரு கலெக்டராக பணியாற்றிய மஞ்சுநாத்தும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் நில வழக்கை முடித்து வைக்க ஒருவரிடம் ரூ.5 லட்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கைதாகி உள்ளார். இதுபோல கடந்த 2010-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு கலெக்டராக இருந்த ராமஞ்சனேயா என்பவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை கடந்த 2015-ம் ஆண்டு சரியான ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டு விடுவித்தது.

மஞ்சுநாத் வீட்டில் ஊழல் தடுப்பு படை சோதனை

ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் பெங்களூரு முன்னாள் கலெக்டர் மஞ்சுநாத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் மஞ்சுநாத் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சில ஆவணங்களை ஊழல் தடுப்பு படையினர் கைப்பற்றி எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story