பெங்களூருவில் விதிகளை மீறி ெசயல்படும் 200 மதுபான விடுதிகள் கண்டுபிடிப்பு; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் மாடிகளில் மேற்கூரை அமைத்து விதிகளை மீறி செயல்படும் 200 மதுபான விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு கோரமங்களா அருகே தாவரகெரே மெயின் ரோட்டில் உள்ள கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தொழிலாளி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அங்கு ஓட்டல் நடத்த அனுமதி பெற்று ஹுக்கா பார் நடத்தப்பட்டதும், இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் சட்டவிரோதமாக செயல்படும் பப், மதுபான விடுதிகள் மீது மாநகராட்சி சார்பில் சோதனை நடத்தப்படும். குறிப்பாக கட்டிடத்தின் மாடிகளில் மேற்கூரை அமைத்து விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபான விடுதிகள் மீது சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கோரமங்களாவில் 4-வது மாடியில் மேற்கூரை அமைத்து செயல்பட்ட கேளிக்கை விடுதியில் தீ விபத்து நடந்துள்ளது.
அங்கு பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் எங்கெல்லாம் மாடிகளில் மேற்கூரை அமைத்து மதுபான விடுதி நடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 200-க்கும் மேற்பட்ட பப், மதுபான விடுதிகளில் விதிமுறைகளை மீறி மாடிகளில் மேற்கூரை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற பப், மதுபான விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியிடம் கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று மாடி மீது மேற்கூரை அமைத்து, அங்கு மதுபான விடுதி நடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று விதிமுறைகளை மீறி செயல்படும் பப், மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் மீது எந்தவிதமான பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் கோரமங்களா தீ விபத்திற்கு பின்பு இந்த விவகாரத்தை மாநகராட்சி தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.