யூடியூபர் டிடிஎப் வாசனின் திருப்பதி கோவில் பிராங்க் வீடியோ: தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
திருப்பதியில் யூடியூபர் டிடிஎப் வாசன், பிராங்க் வீடியோவை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதியில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினர்.
திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வைகுண்ட மண்டபத்தில் இருந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது அறையின் கதவை திறந்து விடும், தேவஸ்தான ஊழியர் போல டிடிஎப் வாசனின் நண்பர் சென்று, காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல செய்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனை பிராங்க் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் டிடிஎப் வாசனின் நண்பர் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் டிடிஎப் வாசன் சாமி கும்பிட சென்ற நாளன்று சாமி தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன் மீது புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது (வழக்கு எண் 72/2024) செக்சன் 299 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்.